விபஸ்ஸனா தியான முறை
Vipassana Meditation

சயாக்யி ஊ பா கின் அவர்கள் வழிமுறைப்படி
திரு ச.நா.கோயங்கா அவர்களால் கற்றுக்கொடுக்கப்படும் தியான முறை

எழுத்துரு உதவி (Font help)  |   International Website   |   அச்செடுக்க உகந்த பிரதி (Printable version)

முகப்பு விபஸ்ஸனா - ஓர் அறிமுகம் ஆசிரியரைப் பற்றி... 'வாழும் கலை' (உரை) ஒழுக்க நெறி செய்தி மடல்கள் சென்னை மையம் மற்ற ஊர்களில்... சேர்வதற்கான தகுதிகள் விண்ணப்பித்தல் நன்கொடை சிறுவர் முகாம்கள்

சிறுவர் முகாம்கள்

பொருளடக்கம்

ஆனாபான என்றால் என்ன? பயிற்சி வடிவம் வயது பிரிவுகள் மற்றும் விதிமுறைகள் உறுதிமொழிகள் பயிற்சியைத் தொடர்தல் கட்டணம்

ஆனாபான என்றால் என்ன?

மனதின் மேல் கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுதல் என்பது நாம் செய்யும் ஒவ்வோர் செயலிலும் துணைபுரியக்கூடியது ஆகும். விபஸ்ஸனாவின் முதல் படியான ஆனாபான முறையை சிறுவர்கள் சிறு வயதிலேயே கற்றுக்கொள்ளாலாம்.

ஆனாபான முறை மனதின் மேல் கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளவும், மகிழ்ச்சியும் செறிவும் நிறைந்த வாழ்க்கை வாழ்வதற்குமான ஓர் எளிய, நடைமுறைப்படுத்தக்கூடிய வழி ஆகும். ஆனாபான என்றால் இயல்பான, சாதரணமான மூச்சு உள்வருவதையும், வெளிச்செல்வதையும் உள்ளதை உள்ளவாறே கவனித்தல் என்று பொருள்படும். மூச்சைக் கவனித்தலை ஒரு தியான சாதனமாகக் கொள்வது என்பது மிகவும் உகந்தது. ஏனெனில், மூச்சுக் காற்று எப்பொழுதும் இருக்கக்கூடியது; அது மதச்சார்பு எதுவும் இல்லாதது; அது இயல்பானது; அது மனதோடு மிகவும் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. இவ்வகையில், மூச்சைச் செயற்கையாக கட்டுப்படுத்தும் பிற முறைகளிலிருந்து ஆனபான மாறுபட்டது. ஆனாபான பயிற்சியில் எந்தவொரு சடங்கோ, வழக்குமுறையோ இடம்பெறுவதில்லை.

ஆனாபான விபஸ்ஸனா தியானப் பயிற்சியின் முதல் படி ஆகும். விபஸ்ஸனா என்றால் "உள்ளதை உள்ளபடி பார்த்தல்" என்று பொருள்படும். விபஸ்ஸனா இந்தியாவின் மிகப்பழமையான தியான முறைகளில் ஒன்று ஆகும். விபஸ்ஸனா மனதைத் தூய்மைப்படுத்துவதற்கான அனைவர்க்கும் பொதுவான, மதச்சார்பற்ற முறை ஆகும்.

இந்த மனக்கட்டுப்பாட்டுப் பயிற்சியின் முதல் படிகளைத் தொடங்குவதற்கு சிறுவயதே உகந்தது ஆகும். சிறுவர்-சிறுமியர் தம் மனதை அமைதியாகவும் ஒருமுனைப்பாட்டுடன் வைத்துக்கொள்ள உதவுவதோடு, ஆனபான அவர்கள் தம்மைத்தாமே புரிந்துகொள்ளவும், தம்முடைய மனதின் செயல்பாட்டைக் குறித்த நுண்ணறிவைப் பெறவும் துணைபுரிகிறது. தவறான நடவடிக்கைகளைத் தவிர்த்து, சரியான செயல்களைத் தேர்ந்தெடுக்கத் தேவையான மன-உறுதியை வளர்த்து, மனதைக் கட்டுப்படுத்தி அதன் மேல் ஆளுமையை வளர்த்துக்கொள்ளவும் உதவுகிறது.

சிறுவர்-சிறுமியர் தமது பயங்கள், கவலைகள், சிறுவயது மற்றும் வாலிபவயது இவற்றுக்கு உரித்தான மனஉளைச்சள்கள் ஆகியவற்றைக் கையாள ஆனாபான ஒரு சிறந்த சாதனமாகப் பயன்படுகிறது. மிக எளிமையாக அமைந்திருப்பதால் சிறுவர்-சிறுமியர் இதை எளிதில் புரிந்துகொண்டு பயிற்சி செய்கின்றனர்.

மேலே செல்க

பயிற்சி வடிவம்

ஆனாபன கற்றுக்கொள்ள வேண்டுமானால், தகுதிபெற்ற ஓர் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் பயிற்சி பெறவேண்டியது அவசியம்.

இந்த பயிற்சி இரு படிகளைக் கொண்டது.

முதல் படி, சிறுவர்-சிறுமியர் எல்லாவிதமான தகாத செயல்களையும் தவிர்க்க முனைந்து முயற்சி செய்வது ஆகும். அவர்கள் பிற உயிர்களைக் கொல்லுதல், திருடுதல், பொய் சொல்லுதல், தகாத பாலியல் செய்கைகள், போதைப்பொருட்களை உட்கொள்ளுதல் ஆகிய ஐந்தையும் தவிர்ப்பதாக உறுதிமொழி மேற்கொள்ள வேண்டும். இந்த உறுதிமொழியைக் கடைப்பிடித்தல் அவர்கள் மனதை அமைதிப்படுத்தி அடுத்த படிக்கு தயார் செய்யும்.

அடுத்ததாக அவர்கள், உள்வரும்-வெளிச்செல்லும் இயல்பான மூச்சின் மேல் கவனத்தை ஒருமுகப்படுத்தி ஆனாபான தியான முறையைப் பயில்வார்கள்.

இந்த பயிற்சிகள் அனைத்தும், இந்தியாவிலும் பிற நாடுகள் பலவற்றிலும் இந்த முறையை மீண்டும் அறிமுகம் செய்த விபஸ்ஸனா ஆசிரியர் திரு ச.நா.கோயங்கா அவர்களின் ஒலி-ஒளிப்பதிவுகள் மூலமே கற்றுத்தரப்படும். பயிற்சி முகாம்கள், விளக்கமும்-செயல்முறையும் இணைந்த 30-40 நிமிட கால அளவு கொண்ட வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும். இந்த தியானமுறையின் பயிற்சியே முகாம்களின் முக்கிய குறிக்கோள் என்றாலும், சில விளையாட்டுகளும், படைப்புத்திறனை வளர்க்கும் சில செயல்முறைகளும் கூட முகாமில் இடம்பெறும்.

தாம் பெற்ற மன-அமைதியையும், மகிழ்ச்சியையும் அனைத்து உயிரினங்களோடும் பகிர, அனைவரிடமும் பேரன்பு செலுத்தி, அவர்தம் நலன்பாராட்டும் 'மெத்த பாவனா' பயிற்சியுடன் முகாம்கள் நிறைவுறும்.

மேலே செல்க

வயது பிரிவுகள் மற்றும் விதிமுறைகள்

உலகெங்கிலும் உள்ள விபஸ்ஸனா தியான மையங்களிலும், வேறு இடங்கள் பலவற்றிலும் ஆனபான முகாம்கள் அவ்வப்பொழுது நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 10 முதல் 18 வரை வயதுள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் பங்குபெறலாம்.

முகாம் முழுவதும் சிறுவர்களும், சிறுமிகளும் தனித்தே இருக்கவேண்டும். முகாமின் பொழுது சிறுவர்-சிறுமியர் வேறு மதச்சடங்குகள் எதிலும் ஈடுபடக்கூடாது. பங்கேற்கும் சிறுவர்-சிறுமியர் ஐந்து உறுதிமொழிகளை ஏற்று, முகாமின் ஒழுக்கநெறியை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும்.

பெற்றோர்களோ, காப்பாளரோ பங்கேற்கும் சிறுவர் அல்லது சிறுமியுடன் உடனிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பெற்றோர்களோ அல்லது காப்பாளரோ இந்த மரபின்படி பயிற்சிபெற்ற தியான சாதகராய் இருந்தால் அவர்கள் வந்திருந்து மைய சேவைப்பணிகளில் ஈடுபட வரவேற்கப்படுகிறார்கள். பெற்றோரிடமிருந்து தனித்து தங்கக்கூடிய சிறுவர்-சிறுமியர் மட்டுமே இரண்டு அல்லது மூன்று நாட்கள் முகாமில் பங்கேற்கலாம். பெற்றோர்களோ அல்லது தெரிந்தவர்களோ உடன் வந்திருந்தாலும், சிறுவர்-சிறுமியரிடமிருந்து முகாம் நடைபெறும் காலத்தில் விலகியே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சில விதிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிக்கூடங்கள், அனாதை ஆசிரமங்கள் முதலிய இடங்களிலும் முகாம்கள் ஏற்பாடு செய்ய இயலும்.

மேலும் விவரங்களை இங்கே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு அறியலாம்.

மேலே செல்க

உறுதிமொழிகள்

ஆனாபான முகாமில் பங்குபெறும் சிறுவர்-சிறுமியர் அனைவரும் பின்வரும் ஐந்து கோட்பாடுகளை முகாம் முடியும்வரை கடைப்பிடிப்பதாக உறுதியளிக்க வேண்டும்.

  1. நான் பிற உயிர்கள் எதையும் கொல்லமாட்டேன்
  2. நான் எனக்கெனத் தரப்பபடுவதை மட்டுமே எடுத்துக்கொள்வேன்; பிறரது பொருட்கள் எதையும் அவரது அனுமதியின்றி எடுக்கமாட்டேன்
  3. நான் பிற சிறுவர்-சிறுமியரை என் உடன்பிறந்தவர்கள் அல்லது எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் என்று கருதியே நடத்துவேன். நான் எவ்வித பாலியல் செயல்களிலும் ஈடுபடமாட்டேன்
  4. நான் பொய் சொல்லுதல், கடுமையான சொற்களை உபயோகித்தல், புறங்கூறுதல் ஆகியவற்றைத் தவிர்ப்பேன். நான் உண்மையாகவும், அன்பாகவும், இதமாகவும் பேசுவேன். பிறரைப் பற்றியோ அல்லது வேறு எதைப் பற்றியோ பொய் அல்லது அவர்களைப் புண்படுத்தும் வகையில் பேசமாட்டேன்
  5. நான் போதையூட்டும் பொருட்களை உட்கொள்ளமாட்டேன்

மேலே செல்க

பயிற்சியைத் தொடர்தல்

இந்த பயிற்சி முறையின் உண்மையான நற்பலன்களை அனுபவிக்க, சிறுவர்-சிறுமியர் இதைத் தொடர்ந்து பயிற்சி செய்வது அவசியமாகும். சிறுவர்-சிறுமியர் இதை வீட்டில் தினசரி 10-15 நிமிடங்கள் பயிற்சி செய்வதற்குத் தேவையான வசதியையும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருமாறு பெற்றோர்களைக் கேட்டுக்கொள்கிறோம். ஒருமுறை பயிற்சி பெற்ற சிறுவர்-சிறுமியர் அவ்வப்பொழுது முகாம்களில் மீண்டும் பங்கேற்பதும் அவசியம்.

மேலே செல்க

கட்டணம்

முன்னர் பயிற்சியை முடித்த மாணவர்கள், தாம் பெற்ற நற்பயன்கள் பிறரும் பெறட்டும் என்று கருதி, தமக்கும் பின்வரும் மாணவர்களுக்காக நிதியுதவி அளிக்க முன்வருகின்றனர். அவ்வாறு மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைகளைக் கொண்டு மட்டுமே இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

மேலே செல்க