விபஸ்ஸனா தியான முறை
Vipassana Meditation

சயாக்யி ஊ பா கின் அவர்கள் வழிமுறைப்படி
திரு ச.நா.கோயங்கா அவர்களால் கற்றுக்கொடுக்கப்படும் தியான முறை

எழுத்துரு உதவி (Font help)  |   International Website   |   அச்செடுக்க உகந்த பிரதி (Printable version)

முகப்பு விபஸ்ஸனா - ஓர் அறிமுகம் ஆசிரியரைப் பற்றி... 'வாழும் கலை' (உரை) ஒழுக்க நெறி செய்தி மடல்கள் சென்னை மையம் மற்ற ஊர்களில்... சேர்வதற்கான தகுதிகள் விண்ணப்பித்தல் நன்கொடை சிறுவர் முகாம்கள்

ஆசிரியரைப் பற்றி...

1924-ம் ஆண்டு பிறந்த திரு சத்திய நாராயண் கோயங்கா அவர்கள் புத்தரின் போதனைகளை செயல்பூர்வமாக உள்ளடக்கியதான விபஸ்ஸனா தியான முறையின் முதன்மை ஆசிரியர் ஆவார். கோயங்காஜி என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் இரண்டாம் உலகப்போரின் பின் மியான்மார் (பர்மா) நாட்டின் முன்னோடி தொழிலதிபராக விளங்கியவர். பொருள் செறிந்த, பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு மனப்பயிற்சியான தியானம் எவ்வாறு உதவுகிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டும் ஒரு வாழும் உதாரணமாக திகழ்கிறார் கோயங்காஜி அவர்கள். அடக்கம், கருணையுள்ளம், சலனமற்ற திட நெஞ்சம் ஆகியவை இவரது பெருங்குணங்கள் ஆகும். சுய-சார்வு சிந்தனை நிறைந்த, இன-மத சார்பு எதுவுமற்ற, நற்பயன் கொடுக்கவல்ல கோயங்காஜி அவர்களின் பாதை மன அழுத்தத்திலிருந்தும், துயரத்திலிருந்தும் வெளிவர செயல்பூர்வமான வழிகளைத் தேடித் தவிக்கும் இன்றைய உலக மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. புத்தரின் அறிவியற்பூர்வமான போதனைகள் உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்படுவதை சுட்டும்வண்ணம் கோயங்காஜி அவர்கள் ஐக்கிய நாடுகள் இயக்கத்தின் பொதுச்சபை கூட்டம், இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஹார்வர்டு வர்த்தகக் குழு, தைவான் நாட்டில் மரியாதைக்குரிய ஷெங் யென் அவர்களின் தர்மா டிரம் மலை மடம், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரின் உலகப் பொருளாதார அரங்கு, ஸ்மித்ஸோனியன் நிறுவனம், மாஸாசுஸெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், சிலிக்கன் பள்ளத்தாக்கு தொழில்முறை இந்தியர்கள் சங்கம் ஆகிய பலதரப்பட்ட நிறுவனங்களிலிருந்தும் உரையாற்ற அழைக்கப்பெற்றுள்ளார்.

தன் மாணவர்களை எதைக் கடைப்பிடிக்கச் சொல்கிறாரோ அதைத் தாமும் தவறாது கடைப்பிடிக்கும் ஓர் உணர்ச்சியூட்டும் முன்மாதிரியாகவும் உதாரணமாகவும் திகழ்வதே கோயங்காஜி அவர்களின் சேவை வெற்றிகரமானதாக விளங்க பெரிதும் உதவுகிறது. "நீங்கள் பிறரைத் தூய்மையான பாதையைப் பின்பற்ற ஊக்குவிக்க விழைவீர்களானல், முதலில் உங்களில் நீங்களே தூய்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் அகத்தே உண்மையான அமைதியையும், இசைவையும் கண்டுகொள்வீர்களானால், அது இயல்பாகவே வெளிப்பட்டு பிறருக்கும் பயனளிக்கும்," என்றே 1989-ம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் நாள் இகாதபுரியில் அமைந்துள்ள தம்ம கிரி மையத்தில் நடந்த ஆண்டு மாநாட்டில் கோயங்காஜி கூறினார்.

திரு கோயங்காஜி அவர்கள் ஓயாது உழைப்பவர். அவர் 2002-ம் ஆண்டு, தமது 78-வது வயதில், தம்மத்தைப் பரப்பும் நோக்கில் அவர் மேலை நாடுகளுக்கு பயணப்பட்டார். தமது துணைவியார் திருமதி இலாய்ச்சிதேவி அம்மையார் அவர்களுடனும், சில மூத்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனும் 128 நாட்கள் அவர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க கண்டம் எங்கும் பயணம் செய்து, விபஸ்ஸனா என்னும் விலைமதிப்பற்ற பரிசை பல நாடுகளிலும் மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொண்டார். இரண்டாம் கட்டமாக ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும், கனடாவிலும் 13,000 மைல்கள் தரைவழிப் பயணம் செய்தார்.

இந்த தம்ம பெரும்பயணத்தின் 62-ம் நாள், அதாவது 2002-ம் ஆண்டு ஜூன் 10-ம் நாள், கோயங்காஜி அவர்கள் கலிபோர்னியா மாகாணத்தின் சாந்தா ரோஸா என்னும் இடத்தில் சோனோமா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பெருந்திரளாகக் கூடியிருந்தோருக்கு உரையாற்றினார்:

"வாழ்நாள் முழுவதும் ஒருவர் தமக்குப் பிடிக்காதவற்றைச் சந்திக்க நேரிடுகிறது; தமக்குப் பிடித்தவற்றிலிருந்து விலக நேரிடுகிறது.

புத்தர் இந்த பிரச்சினையின் அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்தார்; துயரத்திலிருந்து விடுதலை பெற விபஸ்ஸனா என்ற தீர்வைக் கண்டறிந்தார். நம் உடலின் மேல் நாம் உணரும் உணர்ச்சிகளின்பால் நாம் விருப்பம் கொண்டோ அல்லது வெறுப்பு கொண்டோ தொடர்ந்து எதிர்வினை புரிந்து வருவதை அவர் உணர்ந்தறிந்தார். இந்த மனமாசுகளினால் அல்லது பழக்கப் பின்னல்களினாலேயே நாம் நிம்மதி இன்றி துயரப்படுகிறோம்."

விபஸ்ஸனா மூலம் கோயங்காஜி அவர்கள் தம் முந்தைய வாழ்நாட்களின் துயரங்களிலிருந்து வெளிவரும் வழியை அறிந்துகொண்டார். அவர் மியான்மார் நாட்டின் மண்டலே நகரில் இந்தியாவிலிருந்து வந்திருந்த ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்து, மியான்மாரின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். உலகின் பல நாடுகளிலும் அவர்தம் சொந்த நிறுவனங்களின் அலுவலகங்கள் இருந்தன. தமது 30-வது வயதில் அவர், முன்னாட்களில் இரங்கூன் என்று அழைக்கப்பட்ட யாங்கோன் நகரின் தொழில் வர்த்தகச் சபையின் தலைவராகவும், பல சமூக, கல்வி மற்றும் கலை நிறுவனங்களின் தலைமைப் பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெறும் வெற்றிகளைச் சந்தித்திருந்தாலும் கோயங்காஜி அவர்கள் மன அமைதி அடைந்திருக்கவில்லை. மாறாக, மன அழுத்தத்தினால் கொடும் மைக்ரைன் தலைவலிகளுக்கு ஆளானார். உலகின் தலைசிறந்த மருத்துவர்களாலும் அவரது நோயைக் குணப்படுத்த முடியவில்லை. உடலைப் பாதித்து மனதை அடிமைப்படுத்தக்கூடிய வலிய மருந்துகள் மட்டுமே அவருக்கு அப்போதைக்கு உதவின. அதோடு, அந்நாட்களில் கோயங்காஜி அவர்கள் தற்பெருமை நிறைந்த, விரைவில் கோபப்படக்கூடிய நபராக இருந்து தமக்கும், தம்மைச் சுற்றி இருப்போருக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தி வந்தார்.

அவ்வாறு இருந்த நாட்களிலேயே, ஒரு தனித்தன்மை பொருந்தியவராக விளங்கிய மியான்மார் அரசின் முதல் தலைமைக் கணக்கர் சயாக்யி ஊ பா கின் அவர்களை சந்திக்கும் நற்பேறு பெற்று அவரால் மனங்கவரப்பட்டார். ஊ பா கின் அவர்கள் விபஸ்ஸனா கற்றுவித்து, பொது வாழ்வில் ஈடுபட்டிருந்தோர் அதைக் கடைப்பிடிப்பதை வளர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.

புத்தரின் போதனைகளில் விபஸ்ஸனா பெரிதும் வேரூன்றியிருந்தாலும், அது ஒரு மதச் சம்பந்தமான கொள்கையோ, சடங்கோ, வழக்கமோ அல்ல என்பதை கோயங்காஜி உறுதிபட கூறுகிறார். "துயரத்தில் ஆழ்ந்திருக்கும் ஒருவர் மகிழ்ச்சியானவராக மாறுகிறார்; மனதின் பழக்கங்களுக்கு அடிமைப்பட்டுக்கிடக்கும் ஒருவர் அவற்றிலிருந்து விடுதலைபெற்றவராக மாறுகிறார். இவையே விபஸ்ஸனாவினால் ஏற்படும் மாற்றங்கள். இவற்றைத் தவிர, மத மாற்றம் என்ற பேச்சுக்கே இதில் இடமில்லை," என்று கோயங்காஜி அவர்கள் நியூ யார்க் நகரில் ஐக்கிய நாடுகள் இயக்கத்தின் சார்பாக 2000-ம் ஆண்டு நடைபெற்ற உலக அமைதி உச்சி மாநாட்டில் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே முழங்கினார்.

விபஸ்ஸனா முகாம்களுக்கு கத்தோலிக்க பாதிரிமார்கள், புத்த பிட்சுக்கள், பிட்சுணிகள், சமண மதத் துறவிகள், இந்து சன்னியாசிகள், பிற மதத் தலைவர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் வந்திருக்கின்றனர். அனைத்து மதங்களின் போதனைகளிலும் உட்பொதிந்திருக்கும் செயல்முறை சிந்தனையே, மகிழ்ச்சியான பயனுள்ள வாழ்க்கை வாழ அனுபவப்பூர்வமான நுண்ணறிவை வளர்த்துக்கொள்ளும் முறையே விபஸ்ஸனா. சயாக்யி ஊ பா கின் அவர்கள் கூறியதைப் போல், 'நல்ல, உறுதியான, பலதரப்பட்ட, சொந்த, உடனுக்குடனான' பலன்களை அளிக்கவல்லது விபஸ்ஸனா.

1969-ம் ஆண்டில், ஊ பா கின் அவர்கள், கோயங்காஜி அவர்களை தமது பிரதிநிதியாகச் இந்தியாவிற்குச் சென்று விபஸ்ஸனா கற்றுத்தரப் பணித்தார். அது முதல் தம்ம கங்கை தன் பிறந்த நாடான இந்தியாவில் மீண்டும் பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது. இந்தியாவிலிருந்து விபஸ்ஸனா ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐரோப்பா, பசிபிக்-சார் ஆசியா, சீனா, உருசியா, இலத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்ப நாடுகள், ஆப்பிரிக்கா என்று உலகெங்கும் தற்பொழுது பரவி வருகிறது.

1969 முதல் கோயங்காஜி அவர்களும் அவர்தம் துணைவியாரும் விபஸ்ஸனா முகாம்கள் நடத்தி வருகிறார்கள். மாதாஜி என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி கோயங்கா அவர்களும் சயாக்யி ஊ பா கின் அவர்களின் பெருமைமிகு மாணவிகளில் ஒருவரும், முதன்மை ஆசிரியையும் ஆவார். அவர்கள் ஆரவாரமின்றி, தமது கணவர் அவர்தம் ஆசிரியருக்கு நன்றிக்கடனாக புரிந்துவரும் -- மேலும், மேலும் பலருக்கு மோட்சப்பாதையான விபஸ்ஸனாவின் அரும்பலன்களை பெற உதவும் -- பெரும்பணிக்கு ஆதரவு அளித்து, தன்னலமற்ற சேவை புரிந்து வருகிறார்.

இந்தியாவிற்கு வந்த சில நாட்களிலேயே, கோயங்காஜி அவர்கள் தமது கொழிக்கும் தொழில் நிறுவன வேலைகளிலிருந்து வெளியேறி, தமது முழு நேரத்தையும் விபஸ்ஸனா பயில்விப்பதற்கே சமர்ப்பித்தார். ஆறு மகன்களும், பல பேரன்-பேத்திகளும் கொண்ட பெரிய குடும்பத்தின் அன்பான குடும்பத்தலைவராக இருப்பதுடன் அவர் வேகமாக வளர்ந்துவரும், அதிகார மையம் எதுவும் இல்லாத, நெறியான விபஸ்ஸனா நிறுவனங்களின் வழிகாட்டும் வள்ளலாகவும் திகழ்கிறார்.

வளர்ந்துவரும் மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தற்சமயம் 800-க்கும் அதிகமான துணை ஆசிரியர்கள் கோயங்காஜி அவர்களின் சார்பாக -- அவரது பதிவான ஒலி-ஒளி நாடாக்களின் துணைகொண்டு -- முகாம்களை நடத்திவருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் தாமாகவே முன்வந்து இத்தகைய முகாம்கள் நடக்க பலவகையில் உதவுகின்றனர். இந்த பயிற்சி பெறுவதற்கு எந்தவகையான கட்டணமும் கிடையாது. கோயங்காஜி அவர்களோ அவர்தம் ஆசிரியர்களோ முகாம்கள் நடத்துவதினால் எந்த பொருளாதார நன்மையும் பெறுவதில்லை.

2005-ம் ஆண்டு மார்ச்சு 5-ம் நாள் நாசிக் நகரில், 'தம்ம நாஸிகா' மையத்தில் ஆற்றிய உரையில் கோயங்காஜி அவர்கள், "தம்மம் விலைமதிப்பற்றது. பயிற்சிக்கு ஏதும் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தோமேயானால், அது செல்வந்தர்களின் தம்மமாக மாறிவிடும். பணக்காரர்கள் எவ்வளவு விலை கொடுத்தாவது அமைதியை விலைக்கு வாங்க முயலுவார்கள். ஆனால் அவர்களுக்கு அமைதி கிடைக்காது. ஏனென்றால், தம்மம் ஒரு விலைப்பொருளாக மாறிவிட்டால் அது அமைதியை தராது. இக்காலத்திலும், எக்காலத்திலும் விபஸ்ஸனா மையத்தை வியாபார நிறுவனமாக்கும் தவறை ஒருவரும் செய்துவிடக்கூடாது."

கோயங்காஜி அவர்கள் ஆங்கிலம், இந்தி, இராஜஸ்தானி ஆகிய மொழிகளில் திறம்படைத்த எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். "நன்றியுணர்வை பெரிதும் உணர்ந்து, தன்னலம் கருதாது பிறருக்குச் சேவை செய்பவர்கள் அரிதிலும் அரிது," என்ற புத்தர் கருத்தை கோயங்காஜி அவர்களே மேற்கோள் காட்டுவது உண்டு. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தம்ம சேவைக்காக தம்மை அர்ப்பணித்துவரும் திரு கோயங்காஜி அவர்கள் அந்த அரிதிலும் அரிய மனிதர்களுள் ஒருவர் என்பதில் சந்தேகமே இல்லை.

மேலே செல்க